எப்பொழுதும் ஒரு பிரச்னை என்றால் ஏற்படுவது தலைவலி. உங்கிட்ட ஒரே தலைவலியா இருக்கப்பா என்று வழக்கமாக சொல்வதை நாம் கேட்பதுண்டு. இது எதனால் ஏற்படுகிறது? என்றால் அதற்கு ஆயிரம் காரணங்கள் கூறலாம்.
அந்தப் பெண்மணி படுக்கையில் படுத்ததும் ஒருவர் கதவை மெதுவாக அடைத்தார். பிறகு என் நண்பரும் பிள்ளைகளும் சோகமாக அறைக்கு வெளியே வந்து அமர்ந்தார்கள். இதைப் பார்த்த நான், ‘என்னவாயிற்று. ஏன் உங்கள் மனைவியை அறையில் படுக்க வைத்துவிட்டு வெளியே வந்து சோகமாக அமர்ந்து உள்ளீர்கள்?’ என்று வினவினேன்.
‘அதுவா, என் மனைவிக்கு திடீரென்று தலைவலி லேசாக ஆரம்பிக்கும். அப்போது அவளுக்கு கண், முகமெல்லாம் சிவந்துவிடும். உடனே அவளை அறையில் படுக்க வைத்து விடுவோம். அதிலிருந்து ஒரு மூன்று மணி நேரம் தலைவலியால் துடியாக துடித்து விடுவாள்.
எல்லா மருத்துவரிடம் காண்பித்து விட்டோம். எந்த பலனும் இல்லை. மூன்று மணி நேரம் கழித்து இயல்பு நிலைக்கு வந்தவுடன் அவளே எழுந்து வெளியே வந்துவிடுவாள். இந்த தலைவலி தொடங்கும்போது படுக்க வைக்கவில்லை என்றால் கையில் கிடைத்ததையெல்லாம் எங்கள் மீது வீசுவாள்’ என்று கண்ணீர் மல்க கூறினார்.
நான் அவரிடம் எந்த மருத்துவமும் தீர்க்க முடியாத வியாதியை யோகாசனம், மூச்சுப்பயிற்சி, தியானம் தீர்த்து வைக்கும் என்றேன். ஆச்சரியமாக என்னை பார்த்தார். அந்த அம்மையாருக்கு எளிய பயிற்சியை அளித்தேன். தீர்ந்தது அவரின் தலைவலி.
அனைவருக்கும் இந்த தலைவலியை நீக்கி, தலைக்கவசமளிக்கும் யோகா ரகசியத்தை இதோ அளிக்கிறேன்.
தலைவலி வர முக்கிய காரணங்கள்
பொதுவாக தலைவலி உள்ளவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கும். கழிவு தேக்கம் ஏற்படாமல் தடுக்க யோகாவும் சரியான உணவும் தேவை.
மன அழுத்தம் இருந்தாலும் தலைவலி ஏற்படும்.
அஜீரணமாலும் தலைவலி ஏற்படும்.
சைனஸ், மூக்கடைப்பு, சளித்தொல்லை, அடிக்கடி ஜலதோஷம் பிடித்தல் இதனாலும் தலைவலி வருவதற்கு வாய்ப்புண்டு.
உடலில் அதிகமான உஷ்ணம் உண்டாகும்போது தலைவலி ஏற்படும்.
வாழ்வில் எதிர்பாராதவிதமாக அதிர்ச்சியான நிகழ்வுகள் நிகழ்ந்திருக்கலாம். அந்தக் காட்சி மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும். அந்தக் காட்சி திடீர் திடீரென்று மனதில் தோன்றும்போது அவர்களுக்கு தலைவலி ஏற்படும்.
இனி, இந்த தலைவலிக்கு உரிய தீர்வுகளைப் பார்ப்போம்.
சண்முகி முத்திரை
விரிப்பில் கிழக்கு நோக்கி அமரவும்.
முதுகெலும்பு நேராக இருக்கவேண்டும்.
உங்களது இரண்டு கைகளின் பெருவிரல்களாலும் காதின் துவாரத்தை மூடவும்.
இரு கைகளின் ஆள்காட்டி விரல்களால் கண்களை மூடவும்.
நடுவிரல்களினால் மூக்குதுவாரங்களை மூடி, மோதிரவிரல்கள் மற்றும் சுண்டுவிரல்களை படத்தில் உள்ளபடி, உதட்டுக்கு கீழ் வைக்கவும்.
காது வழியாக மட்டும் மூச்சு போகாமல் பெருவிரலினால் நன்றாக மூடிக்கொள்ள வேண்டும்.
ஒரு நிமிடம் அமைதியாக இருக்கவும்.
பின் சாதாரணமாக கைகளை எடுத்து சற்று ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு இரண்டு முறை இவ்வாறே செய்யவும்.
இப்படி செய்யும்போது கபாலப்பகுதி, மண்டை உள்பகுதியில் நன்கு பிராணன் இயங்கும்.
அந்தப் பகுதிகளிலுள்ள நரம்பு மண்டலம் சிறப்பாக பிராண சக்தி பெற்று, சுறுசுறுப்பாக திகழும்.
இரண்டாவது பயிற்சி
படத்தில் உள்ளது போல் வஜ்ராசனத்தில் அமரவும்.
கைகளை சின் முத்திரையில் வைக்கவும். (ஆள்காட்டி விரல் பெருவிரல் நுனியைத் தொட்டு லேசாக அழுத்தம் கொடுக்கவும். மற்ற மூன்று விரல்கள் சேர்ந்திருக்கவும்).
கண்களை மூடவும்.
இரு நாசி வழியாக மெதுவாக மூச்சை இழுத்து, வெளியிடவும்.
மூச்சை வெளியிடும்போது உடல் மற்றும் மனதிலுள்ள டென்ஷன், கவலை, கோபம் வெளியேறுவதாக எண்ணவும்.
இதே போல் 15 முதல் 20 தடவை மூச்சை மெதுவாக இழுத்து மெதுவாக வெளியிடவும்.
உத்தாளபாத ஆசனம்
விரிப்பில் நேராக படுக்கவும்.
இரு கால்களை சேர்க்கவும்.
கைகளின் விரல்கள் குப்புற இருக்குமாறு பக்கவாட்டில் உடம்பை ஒட்டியபடி வைக்கவும். (ஸ்டெப்-1)
மூச்சை உள் இழுத்துக் கொண்டே இரு கால்களையும் சாதாரண நிலையில் தரையிலிருந்து அரை அடி மட்டும் உயர்த்தவும் (ஸ்டெப்-2).
மூச்சை அடக்கி பத்து வினாடிகள் இருக்கவும்.
பின் மெதுவாக மூச்சை வெளியில் விட்டு கால்களை மெதுவாக இறக்கவும்.
ஒரு நிமிடம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை பயிற்சி செய்யவும்.
உத்தாளபாத ஆசனம் பலன்கள்
ஜீரண உறுப்புகள் இறுக்கம் பெற்று நன்கு வேலை செய்யும்.
உச்சி முதல் பாதம் வரையுள்ள அத்தனை நாடி நரம்புகளும் நன்றாகத் தூண்டப் பெற்று சிறப்பாக இயங்கும்.
வாயுத் தொந்தரவு நீங்கும்.
அஜீரண கோளாறினாலும் மலசிக்கலினாலும் வரும் தலைவலி நீங்க இது ஒரு நல்ல ஆசனம்.
தலைவலி போக செய்ய வேண்டிய யோகாசனங்கள் (வீடியோ)
தலைவலி சரியாக யோகா எப்போது செய்யலாம்?
மேலே சொன்ன பயிற்சிகளை தினமும் காலை, மதியம், மாலை சாப்பிடுமுன் என 3 தடவை பயிற்சி செய்யலாம்.
மூன்று வேளை செய்ய முடியாதவர்கள், இரண்டு வேளையாவது செய்யவும். அல்லது காலை மட்டுமாவது பயிற்சி செய்யுங்கள்.
ஒரு மாதம் தொடர்ந்து பயிற்சி செய்தால் பலனை முழுமையாக உணரலாம்.
பெண்கள் மாதவிடாய் காலத்தில் மட்டும் ஐந்து நாட்கள் யோகப்பயிற்சி செய்ய வேண்டாம்.
தலைவலி நீங்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
இரவு படுக்கும் முன் சூடான வெந்நீர் ஒரு டம்ளர் அருந்தி விட்டு ஒரு நிமிடம் சண்முகி முத்திரை செய்துவிட்டு படுக்கவும். இரவு அரைவயிறு சாப்பாட்டை அதுவும் 7:30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். இரவில் பசித்தால் மட்டுமே உணவு உண்ணவும்.
கீரை, பழம், காய்கறிகள் அதிகம் சாப்பிடவும்.
மாமிச உணவைத் தவிர்த்தால் மிக விரைவில் தலைவலி நீங்கும். காரணம், நாம் உண்ணும் உணவில் உள்ள உணர்வலைகள் தான் நமது பண்பை நிர்ணயிக்கும். மாமிச உணவு உட்கொண்டால் கோபம், டென்ஷன் அதிகம் வரும். இதனால் தலைவலி வரும்.
உங்கள் மனதில் கவலையை மூடி மறைத்து வைக்காதீர்கள். யார் எந்த மதத்தைச் சார்ந்தவராகயிருந்தாலும், அந்த தெய்வத்தின் முன் உங்கள் உள்ளத்திலுள்ள எல்லா குறைகளையும் கூறுங்கள். மனம் லேசாகிவிடும்.
உங்கள் மீது அக்கறை உள்ளவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள்.
தலைவலி வரும் அறிகுறி வந்தால் உடனே வஜ்ராசனத்தில் அமர்ந்து மெதுவாக மூச்சை இழுத்து பிறகு மெதுவாக மூச்சை விடவும்.
நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் இருக்கும் நல்ல இயற்கை எழில் சூழ்ந்த பகுதிக்கு மாதம் ஒருமுறை சென்று, ஒருமணி நேரம் இயற்கை அழகை ரசிக்கவும். அது ஏதாவது அழகான ‘பார்க்’காக இருந்தாலும் சரிதான்.
15 நாட்களுக்கு ஒருமுறை, மூன்று வேளையும் பழச்சாறு மட்டும் (நாட்டு மாதுளை (அ) ஆப்பிள் (அ) திராட்சை) அருந்தவும். அல்லது அதையே உணவாக்கி வேறு உணவு ஏதும் எடுக்காதீர்கள். இது உடலில் உள்ள நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகள், தேக்கமுற்ற கழிவுகளை வெளியில் எடுத்துவிடும். இதனால் தலைவலி வராது.
நான் சொன்னதையெல்லாம் நம்பிக்கையுடன் செய்யுங்கள். தலைவலியிலிருந்து முழுமையாக விடுதலையடையலாம்!
0 Comments
Don't Comment Spam Link on Comment Section.